எப்பொழுதாவது தோல்வி அடைந்திருக்கிறீர்களா? கண்டிப்பாக நம்மில் ஒவ்வொருவரும் தோல்வியடைந்திருப்போம். ஆனால் நம்மில் எத்தனை பேர் ஒவ்வொரு தோல்விக்கு பின்னரும் முயற்சித்திருக்கிறோம்? இது தொடர் தோல்விகளையே வாழ்க்கையாக கொண்டு புதிய உலகை படைக்க புறப்பட்ட ஒரு தன்னம்பிக்கையாளரின் கதை.

எலன் மஸ்க், ஒரு கனேடிய அமெரிக்க பொறியாளர், தொழில் முனைவோர், கண்டுபிடிப்பாளர். இவர்தான் இவ்வுலகின் உண்மையான “ஐயர்ன் மேன்” (Iron Man) என்கின்றனர். தான் ஆரம்பித்த நிறுவனத்தில் இருந்தே வெளியேற்றியது, வேலை மறுப்பு, கடும் நோய் என எலன் மஸ்க் வாழ்வில் சந்திக்காத பிரச்சனைகளே இல்லை எனலாம்.

ஒன்று முக்கியமென்றால், தோல்விக்கே அதிக வாய்ப்பு என தெரிந்தாலும்,
அதை நீங்கள் செய்ய வேண்டும்!

என்பது எலன் மஸ்கின் புகழ்பெற்ற மேற்கோள்களில் ஒன்று.

அவரின் தோல்விகளின் பட்டியல் மிக நீண்டது, ஆனால் நம்மால் எளிதாக கடந்து சென்று விடக்கூடியதல்ல. எலன் மஸ்கின் தோல்விகளை பற்றி இப்போது பார்ப்போம்.

1995 – நெட்ஸ்கேப்(Netscape) நிறுவனத்தில் வேலைக்கான விண்ணப்பம் நிராகரிப்பு.

1996 – அவரால் தொடங்கப்பட்ட ஜிப்2 (Zip2) நிறுவனத்தில் இருந்து CEO பணிக்கு தகுதியற்றவர் என்ற காரணத்தால் CTOவாக பதவியிறக்கம்.

1999 – அடுத்த முயற்சியான பேபால் (Paypal) நிறுவனம், பத்து மிக மோசமான வணிக யோசனைகளில் ஒன்றாக வாக்களிப்பு.

1999 – புதிதாக வாங்கிய 1 மில்லியன் டாலர் விலை கொண்ட McLaren F1 கார் சிதைவு. (இந்த வாகனம் மொத்தமே 106தான் தயாரிக்கப்பட்டது)

2000 – பேபால் (Paypal) நிறுவனத்தில் இருந்து வெளியேற்றம்.

2000 – செரிப்ரல் மலேரியா என்ற கொடுமையான மூளை காய்ச்சல் நோயினால் கடும் பாதிப்பு.

2001 – செவ்வாய்க்கு எலி, தாவரங்கள் அனுப்பும் இவரது திட்டத்திற்கு ராக்கெட் வழங்க ரஷ்யா மறுப்பு.

2002 – ரஷ்யாவின் ஒவ்வொரு ராக்கெட்க்கும் 8 மில்லியன் டாலர் விலை நிர்ணயம். மலிவு விலையில் ராக்கெட் தயாரிக்க SpaceX நிறுவனம் தொடக்கம்.

2002 – பிறந்த பத்தே வாரத்தில் முதல் மகன் மரணம்.

2006 – SpaceX நிறுவனத்தின் முதல் ராக்கெட் தரையிலிருந்து மேலெழும்பிய 33 வினாடிகளில் வெடித்து சிதறியது.

2007 – நம்பகத்தன்மையை நிறுவவேண்டிய இக்கட்டான சூழலில் 2வது ராக்கெட் பூமியின் சுற்று வட்டாரப் பாதையை அடைவதற்கு முன்பே எஞ்சின் அணைந்ததால் தோல்வி அடைகிறது.

2008 – 3வது ராக்கெட் நாசா(NASA) செயற்கைகோளுடன் கடலில் விழுந்து படுதோல்வி.

2008 – டெஸ்லா(Tesla), ஸ்பேஸ் எக்ஸ்(SpaceX) நிறுவனங்கள் கடுமையான நிதிச்சுமையால் திவாலாகும் நிலை.

பேபால் (Paypal) நிறுவனத்தை விற்றதில் என் பங்கு 180 மில்லியன் டாலர்கள். அதில் 100 மில்லியனை ஸ்பேஸ் எக்ஸிலும் (Space X), டெஸ்லாவில் (Tesla) 70 மில்லியனும், சோலார் சிட்டியில் (Solar City) 10 மில்லியனும் போட்டது போக என் வீட்டு வாடகைக்கு கடன் வாங்கினேன்.

-எலன் மஸ்க்

2013 – SpaceX நிறுவனத்தின் முதல் மறுசுழற்சி செய்யக்கூடிய ராக்கெட் துணைக்கோள் ஏவுகலம் கடலில் தரையிறங்கும்போது தோல்வி.

2014 – Tesla மாடல் S கார் பல்வேறு விமர்சனங்களுடன் கடுமையான பேட்டரி பயன்பாடு பிரச்சனை கண்டுபிடிப்பு.

2015 – SpaceX நான்காவது ராக்கெட் செலுத்தும்போது வெடிப்புக்குள்ளாகிறது. மற்றும் இரண்டு வெடி விபத்துகள், ஏவுகலம் ஆளில்லா கப்பலில் தரையிறங்கும்போது.

2016 – Tesla மாடல் X சொன்ன தேதியிலிருந்து 18 மாதங்கள் தாமதமாக வாங்கியவர்களிடம் ஒப்படைக்கப்பு.

2016 – Facebook நிறுவனத்தின் ஆப்பிரிக்க பயன்பாட்டுகளுக்கான 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராக்கெட்டுகள் வெடித்து சிதறல். 4, 5 மற்றும் 6வது ஏவுகலங்கள் ஆளில்லா கப்பலில் தரையிறங்கும்பொது தோல்வி.

சாதனைகள்:

இவ்வளவு தோல்விகளையும் கடந்து எலன் மஸ்க் செய்த சாதனைகள் சாதாரணமானவையல்ல. அவரை சிலர் அவ்வப்போது ஸ்டீவ் ஜாப்ஸ் உடன் ஒப்பிடுவதுண்டு. இருவருமே அளப்பெரிய சாதனைக்காய் செய்தவர்கள், கடுமையான தோல்விகளிலிருந்து மீண்டெழுந்து வெற்றிக் கனியை சுவைத்தவர்கள்.

இருப்பினும் இருவரும் மனித சமுதாயத்தின்பால் கொண்ட அணுகுமுறையை கணக்கிட்டால், எலன் மஸ்க் எவ்வாறு தனித்தன்மை கொண்டவர் என்பதை நம்மால் உணர முடியும்.

முக்கிய முயற்சிகள்:

ஸ்பேஸ் எக்ஸ் (Space X)

இது மனித குலத்தை பல கோள் உயிரினமாக மாற்ற வேண்டும் என்ற எலன் மஸ்க் கொண்ட பரந்த தொலைநோக்குப் பார்வையின் காரணமாக விண்வெளி போக்குவரத்து செலவுகளை குறைப்பதை இலக்காக கொண்டு உருவாக்கப்பட்ட விண்வெளிப் போக்குவரத்து வணிக நிறுவனம்.

டெஸ்லா மோட்டார்ஸ் (Tesla Motors)

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களை கொண்ட மின்சார கார்களை தயாரித்து பெருந்திரள் மக்களை அடைவதை குறிக்கோளாக கொண்ட நிறுவனம்.

சோலார் சிட்டி (Solar City)

சூரிய ஆற்றல் தொடர்பான சேவைகளில் நிபுணத்துவம் வாய்ந்த இந்த நிறுவனம், குறைந்த அல்லது தற்போது இருக்கும் விலையிலேயே வீடுகளின் கூரைகளை சூரிய தகடுகளாக (Solar Panel) மாற்றுவது போன்ற சேவைகளில் ஈடுபட்டு வருகிறது.

ஹைப்பர்லூப் (Hyperloop)

hyperloop-one

இது எலன் மஸ்க் முன்மொழிந்த பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான வடிவம் ஆகும். இது விமானத்தை விட அதிக வேகம் செல்லக்கூடிய திறன் கொண்ட ஒரு தொழில்நுட்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓபன் ஏஐ (Open AI)

ஓபன் ஏஐ(OpenAI) என்பது லாப நோக்கின்றி செயல்படும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி நிறுவனம், இது மனித குலத்திற்கு முழுவதும் பயன்படும் வகையிலான நட்புரீதியான செயற்கை நுண்ணறிவை முன்னெடுக்கிறது.

நியூராலின்க் (Neuralink)

neuralink

நரம்பியல் தொழில்நுட்பம் சார்ந்த இந்நிறுவனம், மனித மூளையில் செயற்கை நுண்ணறிவு பதிவது சார்ந்த ஆராய்ச்சிகளை முன்னெடுக்க இருக்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் நினைவுத்திறனை அதிகரித்தல், கணினியை மனித மூளையுடன் இணைத்தல் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் சாத்தியப்படக்கூடும்.

துளையிடும் நிறுவனம் (The Boring Company)

The Boring Company, கடந்த டிசம்பர் 2016ல் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருக்கும்போது இதை பற்றி எலன் மஸ்க் ட்விட்டர் மூலம் அறிவித்தார். கிடைத்திருக்கும் தகவல்களின் படி, மிகப்பெரிய துளைகளின் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைப்பது என்பது இந்நிறுவனந்த்தின் நோக்கம் ஆகும்.

இத்தணை தோல்விகளுக்கு பின்னரும், அவரின் தொடர் முயற்சியினாலேயே வெற்றி இவ்வளவு வெற்றிகள் சாத்தியப்பட்டுள்ளன.

எனவே சாமுவேல் பெக்கெட் கூறுவதுபோல,

எப்போதாவது முயற்சித்து தோல்வியடைந்திருக்கிறீர்களா?
பரவாயில்லை, மறுபடியும் முயற்சியுங்கள்,
மறுபடியும் தோல்வியடையுங்கள், இன்னும் சிறப்பாக